Madurai Somu
When : 18 Sep 2019  | Time: 10:30 AM
Where : University of Madras
About the Event

மதுரை சோமு என்கிற  இசை அசுரன்

தனது குடும்பத்தில் பத்தாவது குழந்தையாகப் பிறந்த மதுரை சோமு, இசையின்பால் தன்னை முதன்முதலில் ஈடுபடுத்திக் கொண்டது ஒரு சுருதிப் பெட்டி வித்வானாகத் தான். வீட்டிலுள்ளோர் இசையின் மீது இவர் காட்டிய நாட்டத்தை ஆதரிக்காத காரணத்தால் அந்த  நாட்களில் பிரபல நாடகக் கம்பெனியான பாய்ஸ் கம்பெனியில் வீட்டுக்குத் தெரியாமல்  சேர, அதைவிட இசை கற்பதே மேல் என அவருக்கு முறையான இசைப் பயிற்சி திருவாளர்கள் சேஷ பாகவதரிடமும் அபிராம சாஸ்திரியிடமும் நடத்தப் பட்டது. சோமுண்ணே (இப்படித்தான் இவரைப் பலரும் அழைத்தனர்) அந்தக் காலங்களில் லட்சிய இசை வழங்கிய எஸ் ஜி கிட்டப்பா, ஜி என் பி, டி என் ஆர் போன்றோரை தனது ஆதர்ச நாயகர்களாகக் கொண்டிருந்தார். இவரது மூல குரு சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை.  இவ்வாறு சோமுவின் தனி வாழ்க்கை பற்றிய தகவல்களுடன் துவங்கி, ஒரு காட்சிப் படிவத்துடன் சுவாரசியமாக வந்திருந்த அனைவரையும் ஈர்த்தமர்த்தும் வண்ணம் பேசினார் திரு லலிதாராம்.

சோமுவின் முதல் கச்சேரி, குருவின் முழு ஆசியுடன் அவரது 15 வயதில் திருச்செந்தூரில் நடந்தது. நாற்பதுகளில் சென்னை(மதராஸ்) ரசிகர்களுக்கு அறிமுகமானார். பிறகு 1945ல் ம்யூசிக் அகாடமியிலும், 1951ல் தமிழ் இசைச் சங்கத்திலும் பாடியுள்ளார். இவரது இசையின் தனித்தன்மை, மதுரை மணிஐயரைப் போலவே, எப்பொழுதுமே பாமர ரஞ்சகத் தன்மையைக் கொண்டிருந்த ஒன்றாக அறியப்பட்டுள்ளது. ரசிகர்களின் மனப்போக்கை ஆதாரமாகக் கொண்டே அவரது ஒவ்வொரு கச்சேரியும் அமையும், அமைத்துக் கொள்வார் என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த இசைக்கு அங்கீகாரம் கிடைத்ததா?. இவரை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டம், தமிழ் இசைச் சங்கத்தின் இசைப் பேரறிஞர், மத்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழ் நாடு அரசின் விருது,  சங்கீத நாடக அகாடமியின் விருது போன்றவை வந்தடைந்துள்ளன. 1963ஆம் ஆண்டு மறுபடியும் ம்யூசிக் அகாடமிக்குள் பிரவேசித்த சோமு, 1983 வரையில் தொடர்ந்து இங்கு கச்சேரி நிகழ்த்தியது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். ஏதோ சில காரணங்களுக்காக ஒரு காலகட்டத்தில் இவரை ஒதுக்கிய சில சபாக்களும் இவரது கச்சேரியை தங்கள் வருடாந்தர நிகழ்வுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. தனது இசைத் திறத்தால் ஒரு உயர்ந்த நிலை ஸ்தானத்தைப் பெற்றார் சோமு.

கலை கலைக்காகவே என்றால் சோமுவின் இசையும் இசைக்காகவேயான அர்ப்பணிப்பேயாகும். இந்த இசையானது கட்டுக்கடங்காத கற்பனையின் பெரும் ஊற்று. ஒரேயடியாக மரபை ஒட்டியதல்ல. சதா நூதன முயற்சிகளின் வெளிப்பாடு. இலக்கணம் இசைக்கு வழிகாட்டி தான், இறுக்கமாக்கும் கைவிலங்கு அல்ல என்ற கொள்கையுடையது. இத்தனை பெருமிதங்கள் பெறப்பெற்றும் அணுகுவதற்கு எளியவர் அவர். ரசிகனை அனுபவிக்கச் செய்து தானும் உடன் அனுபவித்தவர்; அவ்வாறு உணர்ந்த ஒவ்வொரு நொடியையும் கொண்டாடிக் களித்தவர். இவரது குரல் வளத்தை முழுமதிப்பீடு செய்தவர்கள் சிலரே. கனமான ஆனால் நல்ல நுணுக்கத்துடன் வளைந்து கொடுக்கும் சாரீரத்தைப் பெற்று, மூன்று ஸ்தாயிகளிலும் அனாயாசமாகப் பாடி, மணிக்கணக்கில் பாடிய பின்னும் சுருதியை விட்டு இம்மியளவும் பிறழாமல், சிக்கெனப் பிடித்து, தம்புராவின் மீட்டா அல்லது சோமுவின் குரலா என்ற வியப்பை நம்முள் உண்டாகச் செய்தவர். பாடப் பாட மெருகேறி உச்சத்தையும் மிருதுத் தன்மையையும் எட்டும் குரல் இவருடையது.

சோமுவும் ராக ஆலாபனைகளும் இணைபிரியாதவை. அவர் மட்டுமே எடுத்தாண்ட ராகங்கள் பலவுண்டு. ராகத்திற்கு ஏற்ற அணுகுமுறை. எங்கிருந்தோ குதித்து வரும் அலாதிப் பிரயோகங்கள். குரலில் நாகஸ்வரப் பாணி என்றால், அந்த வாத்தியக்காரர்கள் கையாண்ட அனைத்தையும் வாய்ப்பாட்டில் வரச் செய்து வெற்றி கண்டவர். நெரவலில் இரண்டு ஜாதி. ஒன்று அநேகமாக இன்னொரு ஆலாபனை போன்றே இருக்கும். மற்றொன்று பாரம்பரிய முறைகளையொட்டி அமைத்துக் கொள்வார். ராகம் தானம் பல்லவி இல்லாத சோமுவின் கச்சேரியா? இல்லவே இல்லை. தானத்தைச் சுருக்கி விடுவது இவர் குணம். மேற்சொன்னது போல ஆலாபனை விரிந்து பரந்திருக்கும். இவரது பல்லவிகள் த்ரிபுட, அட, மட்டிய, த்ருவ தாளத்தில், சொற்கள் நிறைந்தும் கார்வைகள் குறைந்தும், கடைசி கோர்வை பக்க வாத்தியக்காரர்களை ட்ரில் வாங்குவதாகவும் இருப்பது சகஜம்.

பல்லவிக்குப் பின் வரும் கச்சேரியின் துக்கடா பகுதிக்கென்றே வரும் ரசிகர்கள் ஏராளம். பல ராகங்களில் பல விருத்தத் தொடர்கள், நீலமணியில் தவழ்ந்து வரும் “என்ன கவி பாடினாலும்” மற்றும் ஆபோகியில் உருக்கத்துடன் பாடும் “உள்ளக் கோவில்” போன்ற பாடல்கள், பட்டி தொட்டியில் சோமுவை அறியச் செய்த “மருதமலை மாமணியே”, மந்திர கோஷம் போல ஒலிக்கும் இடங்கள், அடுத்தடுத்து மூச்சு வாங்கக்கூட அவகாசமின்றி வரும் பாடல்கள், ஆர்வலர்களிடமிருந்து வரும் “சீட்டிலிருப்பவை”, அதிகம் பிரபலமாகாதவர்களின் பாடல்கள், “தான்” (Taan) அங்கத்துடன் வரும் ஹிந்துஸ்தானி பஜன்கள் என்று பலவகை. பரவச நிலையடடைந்த ரசிகர்களின் ஆரவாரமும் கைதட்டல்களும் இங்கே நிறைந்திருக்கும் என்று சொல்லவா வேண்டும். ஹிந்துஸ்தானி முதற்கொண்டு நமது மகா வித்வான்கள் தங்களதென்று ஆக்கிய பாணிகளை தான் பாடும் போது எடுத்துக்காட்டி, அவ்விடங்களில் அவரவர்களின் பெயர்களையும் உதிர்த்து விடுவார் சோமு.

இவ்வாறாக படிப்படியாக சோமுவின் முழுநேர கச்சேரி ஒன்றைக் கேட்பது போன்ற நிஜஅனுபவத்தை அளித்தது லலிதாராமின் பேச்சு. முத்துப் பதித்தாற் போல அங்கங்கே சோமுவின் ஆலாபனையின் தனிசுகம், நெரவலின் நெளிவு சுளிவுகள், பிரம்மாண்ட ஸ்வர அமானுஷ்யங்கள், நிறைவுப் பகுதியின் விசேஷங்கள் ஆகியவற்றையும் வரிசைக் கிரமமாக லலிதாராம் அளித்ததைக் கேட்டு ரசித்தோம். இங்கே பாடற்-பதிவுகளைக் ”கட்” ஏதுமின்றி ஒலி பரப்பியதால், சோமு என்ற ஆளுமை நம் கண் முன்னே, அவரது சங்கீதம் செவிவழி நம் மனதிற்குள் - எனும் ஒரு நிறைவுடன் கேட்க முடிந்தது. (In a word, there was more music, than talk)

(இவ்வாண்டு சோமு என்ற இசை-சகாப்தத்தின் நூறாவது ஆண்டு. இதை முன்னிட்டு சென்னைப் பல்கலைக் கழகம் தனது வளாகத்தில் திரு கே ஏ சக்ரவர்த்தி நினவு நிதிவழி ஆதரவில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் இந்த உரை நிகழ்த்தப் பட்டது)

எஸ் சிவகுமார்


comments powered by Disqus
About Sabhash - Everything about classical music, dance, drama and a platform for inclusive entertainment

Sabhash.com is the one-stop destination for the latest news and information on the performing arts of India - classical music and dance, theatre, bhajans, discourses, folk performances, and other lesser known art forms. Institutions that revolve around the performing arts have exploded in numbers, and thanks to the Internet which has made information easily accessible, the number of rasikas has grown too. Corporate patronage has played a big part in increasing the world-wide reach of the Indian arts. Sabhash wishes to be a platform for inclusive growth giving an equal opportunity and recognition to not only the main performer but also the artistes who accompany them on stage, and the people who work backstage and play the role of unsung heroes.