Sign-up for Newsletter

Music > Face-To-Face
நாகஸ்வரக் கலைஞர்
09 October, 2019

நாகஸ்வரக் கலைஞர் வியாசர்பாடி கோதண்டராமனிடம் பத்து கேள்விகள்

பல வருடங்களாக சென்னையில் உள்ள வியாசர்பாடி வாசியாகவும் இருந்து, தனது பெயரிலும் அதனைப் பெற்று விளங்கும் வியாசர்பாடி கோதண்டராமனின் நாகஸ்வர வாசிப்பில் ஒரு தனி கம்பீரமும், ஒரு மெச்சத்தக்க நளினமும் ஒருங்கே கலந்திருக்கும். ம்யூசிக் அகாடமி இந்த வருடத்திற்கான டி டி கே விருதை அவருக்கு அளித்து கௌரவிக்க இருக்கிறது.

அவருடன் நடத்திய சம்பாஷணை இதோ:

இந்த விருது பற்றி யார் அறிவித்தார்கள்? நீங்கள் எவ்வாறு இதை எதிர் கொண்டீர்கள்?

ஜுலை 21, 2019 அன்றுதான் இந்தத் தகவல் எனக்கு தெரிவிக்கப்பட்டது. திரு ஸ்ரீராம் வெங்கடக்ருஷ்ணன் அவர்கள் ம்யூசிக் அகாடமியின் தரப்பில் என்னையழைத்து, உங்களுக்கு டி டி கே அவார்டு அளிக்கப்பட உள்ளது என்றார். அதைக் கேட்ட சமயம் எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பெரும் மகிழ்ச்சி தான். நாகஸ்வரத்திற்கு இது கிடைத்திருப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஏற்கெனவே இந்த வாத்தியக்காரர்களுக்கு இந்த விருது கிடைத்திருந்தாலும், இது ஒரு மறக்க முடியாத ஒன்றாக எனக்கு இருந்தது..

உங்களது குருக்கள் பற்றி, உங்களது தகப்பனார், மற்ற குருமார்கள்….உங்களது ஊரின் மகிமை  பற்றி ….எப்பொழுது சென்னைக்கு வந்தீர்கள்?

ஊர் என்று கேட்டால் எங்கள் ஊர் திருப்புலிவனமாகும். காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் வழியிலிருக்கிறது. உத்திரமேரூருக்கு ஒரு 5 கி.மீ தள்ளி இருக்கும். ஆனால் பிறந்தது சென்னையில் தான். ஆரம்பப் பாடம் என்று பார்த்தால் வந்தவாசி பக்கம் பையூரைச் சேர்ந்த திரு டி எஸ் ஏகாம்பரம் தான் எனக்கு அதை போதித்தவர். அவர் எனது தாத்தாவகும். அடுத்து எனது தந்தையிடம் கற்றேன். அவர் திரு டி கோபாலசுவாமி ஆவார். நான் இந்த அளவிற்கு ஒரு வித்வானாக இருக்கிறேன் என்றால் அது அவர்களால் தான். தவிற நான் மெட்ராஸ் ம்யூசிக் காலேஜில் 1980 முதல் 1983 வரை சேர்ந்து மேன்மை தாங்கிய திரு லட்சப்ப பிள்ளை அவர்களிடம் பயின்றுள்ளேன். எப்போதுமே நல்ல சங்கீதம் என்று எது வந்தாலும் அதைக் கேட்டு பயன் பெற்றுள்ளேன். எல்லாவற்றையும் கேட்க வேண்டும், அதில் நல்லதை எடுத்துக்  கொள்ள வேண்டும். இப்படிக் கேட்டுக் கேட்டு பலரை எனது மானசீக குருவாகவும் ஏற்றுக் கொண்டுள்ளேன்.

எதிர் நாயன முறை கற்பித்தலால் கிடைக்கும் விசேஷ பலன் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்?

அதற்கு அளவே கிடையாது அதிகமான பலன் அதில்தான் இருக்கு. நுணுக்கங்களை அறிவதற்கு இதுவே சிறந்த ”மெதட்” (முறை) எனலாம். கீர்த்தனை எப்படி வாசிப்பது, மல்லாரியில் என்ன ஸ்பெஷல், கல்பனாஸ்வரம் வாசிப்பதில் கவனம் எங்கிருக்க வேண்டும், விரலடி எங்கு பயன் படுத்த வேண்டும், ப்ருகா எங்கு எப்படி பேச வேண்டும், ராக சஞ்சாரத்தில் எங்கு நிறுத்துவது அழகாகவும் சரியாகவும் இருக்கும் என்பதையெல்லாம் நேரடியாகப் பார்த்து, கேட்டு அறிந்து கொள்ளலாம். பழைய குருகுல முறையிலே நான் கற்றதனால் இதையெல்லாம் பார்த்துக் கற்றுக் கொள்ள எனக்கு வாய்ப்பு இருந்தது. காலையில் நாங்கள் எழுந்து ப்ராக்டிஸ் பண்ணும் போது எங்கள் தகப்பனார் வந்து கரெக்‌ஷன் பண்ணுவார். திட்டவும் செய்வார். இந்த நேரடி முறை எல்லா வாத்தியத்திற்கும் பொருந்தும் என்று நான் நினைக்கிறேன். வாய்ப்பாட்டில் கூட இப்படித்தான். சில சமயங்களில் ஒருவர் பாட்டைக் கேட்டவுடன் அவருடைய குருவை அந்தப் பாடகர் ஞாபகப் படுத்தி விடுவார். அல்லது இவர் யாருடைய சீடர் எனும் கேள்வி உடனே நம்முள் நம்மையறியாமலேயே எழுவதைப் பார்த்திருக்கிறோம் அல்லவா? இது எந்த அளவிற்கு சீடர் குருவின் முன் உட்கார்ந்து கற்றுக் கொண்டிருக்கிறார் என்பதை நமக்கு உணர்த்தும்.

வாத்தியக்காரர்கள் வாய்ப்பாட்டு கற்றுக் கொள்ளுதல் அவசியமா? இது போன்று கற்று வாசிப்பதனால் வாசிப்பு எப்படி இன்னும் நன்றாக அமைகிறது?

சாஹித்யம் வெளிப்படுத்துவது துத்தகாரம், அதாவது நாக்கால் தட்டி வாசிப்பதினால் தான். அதனால் பாட்டைக் கற்றுக் கொண்டு பின் வாசித்தால் எங்கெங்கே இது (துத்தகாரம்) கொடுக்க வேண்டும் என்பது புலனாகிவிடுகிறது. பாட்டைக் கற்பதனால் வாசிப்பவருக்கு பல நன்மைகள். எந்த வார்த்தைகளை எவ்விடத்தில் பிரிப்பது, எங்கு பிரிக்கக் கூடாது இதெல்லாம் சாஹித்யத்தில் இருப்பது போல அமைய இது உதவும். கேட்பவர்களும் பல விதமான வாசிப்பை நிறையவே கேட்டிருப்பார்கள். இதனால் வாய்ப்பாட்டு கற்று வாசிக்கிறார், அல்லது கற்காமல் வாசிக்கிறார் என்பதை எளிதாகக் கண்டு பிடித்து விடுவார்கள்.  மேலும் பாட்டு கற்பதால் எங்கு நெரவல் செய்யலாம், நீட்டல் குறுக்கல் எங்கெங்கு கொடுக்கலாம், கொடுத்தால் பாட்டு போல அமையுமா என்பதையும் புரிந்து  கொள்ளலாம். அதே போல நமது மனோதர்மம் எந்தெந்த இடங்களில் உபயோகப் படுத்தலாம் என்பதும் மிகத் தெளிவாகிவிடும்.

அப்பியாசம் தான் ஒரு கலையில் சிறந்து விளங்க வேண்டியதற்கான முக்கிய தேவையாகிறது. அதே சமயம் நாகஸ்வரத்திற்காக கூடுதல் முயற்சிகள் தேவையா?

சரியாகச் சொன்னீர்கள். எல்லா நாகஸ்வரக்காரர்களும் ஒரு கோவிலுக்கு என்றுதான் வாசித்துக் கொண்டிருப்பார்கள் நானும் வியாசர்பாடி மரகதாம்பாள் சமேத ரவீஸ்வரர் ஆலயத்துடன் இணைக்கப் பட்டு வாசித்தவன். கோவில் தான் இந்தக் கலையைப் பெரிதும் வளர்த்துள்ளது. இது அனைவருக்குமே தெரிந்த ஒன்று. கோவில் திருவிழாவின் போது சாதாரணமாக 8 அல்லது 10 மணி நேரம் இடைவிடாமல் வாசிக்க வேண்டி வருவதால் யோசிக்காமல் உடனுக்குடன் வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்காக கோவிலில் மற்ற நேரங்களில் நிலவும் ஒரு நிசப்தத்தை நாங்கள் உபயோகித்துக் கொள்வோம். வாசிக்கத் தோதாக இருக்கும். என்ன கோர்வைகள், எப்படி ராகம், எப்படி விரலடி என்பதையெல்லாம் ஒரு தயார் நிலையில் வைத்திருக்க இந்த அப்பியாசம் உதவும்.

வழக்கமாக நாகஸ்வரக்காரர்கள் ஒரு 5 அல்லது 6 மணி நேரம் வாசித்த பின்பும் அசதி காணப்படுவதில்லை. இது எவ்வாறு சாத்தியமாகிறது?

5 அல்லது 6 மணி நேரம் என்பதெல்லாம் மிகக்குறைவு. கோவிலில் ஸ்வாமி புறப்பாட்டிலிருந்து ஆரம்பித்தால் குறைந்தது 12 மணி நேரம் விடிய விடிய வாசிக்க வேண்டி வரும். இது எப்படி என்பதல்ல கேள்வி. வாசிக்க வேண்டும் என்பது தான் நடக்கும், நியதி. அதுவும் நின்று கொண்டே வாசிக்க வேண்டும். இப்போது அதெல்லாம் குறைந்து விட்டது. ஒரு 25 வருடங்களுக்கு முன்னால் நானே ஒரு 12 மணி நேரம் எங்கள் கோவிலில் வாசித்திருக்கிறேன். வெறும் மல்லாரி மட்டும் 3 அல்லது 4 மணி நேரம் போகும். இப்போ எல்லாம் என்னவென்றால் இந்த ச்ருதி பாக்ஸே எங்களுக்குக் கேட்பதில்லை. எங்கு பார்த்தாலும் அமைதியின்மை. அப்பொழுதெல்லாம் சுற்றியுள்ள ஒரு நான்கு தெருக்களில் நாகஸ்வரம் கேட்கும். அதாவது வாசிக்க வாசிக்கத்தான் புது எண்ணங்கள், புது சங்கதிகள், புது வழிகள் பிறக்கும். எங்களுக்கே நிறைய விஷயங்கள் தென்படும், எட்டும். உற்சாகம் பெருகுவதால், அசதி என்ற வார்த்தைக்கே இடமில்லை.

கல்யாணக் கச்சேரிகள் வாசிப்பதில் உங்கள் அனுபவம் பற்றி சொல்லுங்கள்? இது பல விதமானதாக இருக்கக் கூடும் அல்லவா?

உண்மைதான் பல அனுபவங்கள் உண்டுதான். குறைவாக வாசித்ததும் உண்டு. எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருந்திருக்கிறோம்.  கூடுமானவரை பாட்டுக்காரர்கள் கல்யாணங்களையே ஒத்துக் கொள்வோம். பிரபல பாடகர்கள், பிரபல வயலின் அல்லது இதர வாத்திய வித்வான்கள் வீட்டுக் கல்யாணம் என்றால் எந்தவிதமான தடங்கலும் இருக்காது. சங்கீதம் தெரிந்த இடமல்லவா? இதனால் இப்படி. ஆனால் அடிக்கடி நிப்பாட்டச் சொல்லி வாசித்துள்ள இடங்களும் உண்டு. இதற்கு நேர் எதிர்மாறாக காலை டிபன் கூட சாப்பிட நேரம் ஒதுக்க முடியாமல் தொடர்ந்து வாசித்த இடங்களும் உண்டு.

க்ளீவ்லெண்ட் சென்று வந்திருக்கிறீர்கள். இந்த அனுபவம் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்? அங்குள்ள தட்பவெட்ப நிலை, இதனால் நாகஸ்வரம் பாதிக்கப்படுதல், சீவாளி பாதிக்கப்படுதல் இவை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்? மற்ற வெளிநாடுகள் சென்று வந்திருக்கிறீர்களா? அந்த அனுபவம் எப்படி இருந்தது?

க்ளீவ்லெண்டில் வாசித்த அனுபவம் வேறு வகை. அந்த சீதோஷ்ண நிலையில் சீவாளியைத் தொட்டுணர்வது கூட இயல்பான நிலையில் இருக்காது. மாறுபட்டே இருக்கும். நமது நாட்டில் இந்த ஒரு மிதமான க்லைமேட் (climate) நிலையில் இருந்து ஒரு முற்றிலும் குளிர் பிரதேசத்திற்குச் செல்கிறோம். அங்கே, ஒரு சீவாளி என்று எடுத்துக் கொண்டால், ஒரு கச்சேரியில் நன்றாக அமைந்திருக்கும். ஆனால் அதே சீவாளி அடுத்த கச்சேரிக்கு அமையாது. வாத்தியமும் கையில் பிடித்திருக்கிறோமா இல்லையா என்ற உணர்வு இல்லாதது போலத்தான் இருக்கும். அதே போல் விரல்கள் விறைத்தும் ஹோல்ஸ் (துளைகள்) இருக்கும் இடத்தில் இல்லாதது போன்ற ஒரு நிலை தோன்றும். ஆமாம். இது எல்லா தோல் வாத்தியங்களுக்கும் ஏற்படும் என்று சொல்லலாம். நாகஸ்வரமும் மரத்தால் ஆன ஒன்றல்லாவா? இதனால் தான் இந்த நிலை. ஆனால் இதையெல்லாம் மீறி வாசிக்க வேண்டும். வாசித்திருக்கிறோம்.

இதைவிட ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் பெற்ற அனுபவத்தை இங்கே குறிப்பிட வேண்டும். அதுவும் விநோதமானதுதான். இது 2010 வில் எனது முதல் வெளிநாட்டுப் பயணமாக அமைந்தது. ஒரு 20 நாட்கள் சென்று வந்தோம். அங்குள்ள பெருமாள் கோவிலில் உற்சவம். சுவாமி புறப்பாடு. அங்கு நமது மாட வீதி போன்ற அமைப்பில் திறந்த வெளியில் வாசிக்க வேண்டும். அதுவும் சட்டையில்லாமல். சில்லென்ற காற்று வீசும். வாசிக்கவும் முடியாது, வாசிக்காமலும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலை. இதையும் மீறி வாசித்துள்ளோம். பெரிய சாலன்ஜ் (challenge) தான்.

முழுக் கச்சேரி என்பது நாகஸ்வரத்திற்கென்று சபாக்கள் அளிப்பதில்லை. பெரிதாக கூட்டம் வருவதில்லை என்பார்கள். இது உண்மையா? நாகஸ்வரத்திற்கான எதிர்காலம் எப்படி இருக்கிறது? நாகஸ்வரம் அன்றும் இன்றும்….ஒரு பார்வை

க்ருஷ்ண கான சபாவும் ப்ரஹ்ம கான சபாவும் ஒரு நாகஸ்வர விழாவை நடத்தும் பழக்கமுள்ளவர்கள். ஏனோ கே ஜி எஸ் சென்ற வருடம் நடத்தவில்லை. தமிழ் இசை சங்கத்தில் அப்பொழுதெல்லாம் நிறைய நாகஸ்வரக் கச்சேரிகள் நடக்கும். இப்பொழுது அங்கும் குறைந்து விட்டது. இளைய தலைமுறையினருள் மிக மிக நன்றாக வாசிப்பவர்கள் இப்பொழுது தயாராகி விட்டார்கள். கதவைத் தட்டுகிறார்கள். நான் சென்னையை மட்டும் சொல்லவில்லை தமிழ்நாடு முழு மாநிலம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கிறேன். அவர்களுக்கெல்லாம் ஒரு மேடை தேவை, அரங்கம் தேவை. இந்த விஷயத்தில் டி எம் க்ருஷ்ணா அவர்கள் போற்றத்தக்க பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறார்.  சென்ற அக்டோபர் 3 முதல் 5 வரை ஸுமனஸா ஃபவுண்டேசன் என்ற அமைப்பு மூலம் நாகஸ்வர வித்வான்களுக்குப் பிரத்யேகமான நிகழ்ச்சிகள் நடத்தினார். திரு விஜய் சிவா நாகஸ்வரக்காரர்களுக்கென்று நவாவர்ண கீர்த்தனைகள் கற்பித்தார். கோவிலில் நடந்தேறும் திருவிழா உற்சவத்தால் இந்தக் கலை வாழ்ந்து வந்திருக்கிறது. மேலும் வாழ சபாக்கள் முயற்சி கொள்ள வேண்டும். எடுத்து வருகிறார்கள். மேலும் எடுக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

உங்கள் மாணவர்களைப் பற்றி சொல்லுங்கள்

எல்லாரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். கற்றுச் சென்று சுமார் 15 வருடங்கள் கூட ஆகியிருக்கும். எல்லாரும் ஏ க்ரேடில் (A Grade) இருக்கிறார்கள். நிறையப் பேர் கல்லூரிகளில் ஆசிரியப் பணியில் இருக்கிறார்கள். வெளிநாட்டிலும் இருக்கிறார்கள். (எவ்வளவு பேர் என்று மறுபடி மறுபடி தொடர்ந்து நிர்ப்பந்தித்துக் கேட்டதும் தயங்கித் தயங்கி சுமார் 600 பேர் இருக்கிறார்கள் என்கிறார். புல்லாங்குழல் வித்வான் காலஞ்சென்ற திரு என் ரமணி உலகம் முழுவதிலும் சுமார் 1000 மாணவர்கள் எனக்கு இருக்கிறார்கள் என்று சொன்னது உடனே நினைவிற்கு வருகிறது.) கோதண்டராமனிடம் கேட்டு வாங்கிய பட்டியல் இதோ:

Tirupati B.Kesanna, Hospet Shrinivas, Kurnool Ramprasad, Cudappa Subramanyam, Suresh Chittoor Devarajalu

Villupuram students:

Mylai Karthikeyan, K.Muruganandam, S.Sivanesan, R.Elumalai, K.Ganesh, P.Mohan, M.Suresh, B.Vasanthkumar, Ramachandran, Pichamuthu, Ramanujam, Chiranjeevi, Manikandan, Mambalam N.Manikandan,V.Ramachandran, V.Sadasivam, B.Perumal, Koleri G.Vinothkumar N.Boopathi.

கற்க வரும் இளைஞர்களுக்கு ஓரிரு வார்த்தைகள்

நல்ல பயிற்சி தேவை. பயிற்சி எப்படி மேற்கொள்ள வேண்டும் என்ற கவனமும் தேவை. வாத்தியம் எப்பவுமே ரெடியாக இருக்க வேண்டும் ப்ராக்டிஸ் (Practice) பண்ணுவதற்கு வசதியாக. அடுத்து சாதகம், சாதகம், சாதகம். இதுதான் அவர்களுக்கு நான் சொல்வது. அது சற்றே குறைந்திருக்கிறதோ என்ற சந்தேகம் எனக்கு. உங்களை அர்ப்பணித்துக் கொண்டு சாதகம் செய்யுங்கள். சிறந்து விளங்குவீர்கள். இது நிச்சயம்.

எஸ் சிவகுமார்

About Sabhash - Everything about classical music, dance, drama and a platform for inclusive entertainment

Sabhash.com is the one-stop destination for the latest news and information on the performing arts of India - classical music and dance, theatre, bhajans, discourses, folk performances, and other lesser known art forms. Institutions that revolve around the performing arts have exploded in numbers, and thanks to the Internet which has made information easily accessible, the number of rasikas has grown too. Corporate patronage has played a big part in increasing the world-wide reach of the Indian arts. Sabhash wishes to be a platform for inclusive growth giving an equal opportunity and recognition to not only the main performer but also the artistes who accompany them on stage, and the people who work backstage and play the role of unsung heroes.