Sign-up for Newsletter

Music > Review
Neyveli - Isayurai
10 February, 2020

நெய்வேலி சந்தானகோபாலனின் இசையுரை

”பறந்து கொண்டிருக்கும் ஒரு பருந்தையும், அதனுடன் தொடர்ந்து வரும் அதன் நிழலையும் கற்பனை செய்து கொள்ளுங்கள். சாஹித்யத்துக்கும் அதில் பரவியிருக்கும் இசைக்குமான உறவு இத்தகையதே. இதை நான் சொல்லவில்லை. கவிச்சக்ரவர்த்தி கம்பனுடையது இந்த அருமையான உவமை” என்று தனக்கேயுரிய பாணியில், தனது செயல்விளக்க சொற்பொழிவைத் துவக்கினார் திரு நெய்வேலி சந்தானகோபாலன். சிரி-சிந்தி எனும் வகையில் அவர் உதிர்த்த செறிவான பல கருத்துகள் அமைந்திருந்தன: அனைவரது கவனத்தையும் கவர்ந்தன. இந்த இசையுரை, பாலம் எனும் அமைப்பு ஒருங்கிணைத்து நடத்திய தொடர்சொற்பொழிவுகளில் ஒன்றாக, சென்னை மைலாப்பூரில் உள்ள ஒய்எம்ஐஏவின் (YMIA) டாக்டர் அன்னிபெஸண்ட் நூற்றாண்டு நினைவரங்கில் நடந்தேறியது.  இவை ”ஸங்கீத-ஸாஹித்யானுபவம்” என்ற தலைப்பின் கீழ் நடத்தப்பட்டன.

மாணிக்கவாசகர். ”பண்சுமந்த பாடல் பரிசு” என்பார். இந்தக் கருத்தை அடுத்து முன்வைத்த சந்தானகோபாலன் எல்லா பாடல்களுக்குள்ளும் ராகம் என்கிற ரசம் உட்கார்ந்திருக்கிறது என்பதையே மணிவாசகரிடமிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது வார்த்தை என்பது வெறும் வார்த்தையல்ல, ஓசைகளாலும், ஒலிகளாலும் அதனுள் இசை எனும் தேனானது, ஒரு புஷ்பத்தில் உறைந்திருப்பது போல நிறைந்திருக்கிறது. ஆக வாய்ப்பாட்டு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது எனும் கேள்விக்கு அதன் சாஹித்யானுபவத்தையே பதிலாகக் கொள்ளலாம் என்றார். அடுத்து ஈ எனும் ஒரெழுத்து அருணகிரிநாதரால் எவ்வாறு உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. பாருங்கள். இதற்கு ”சிகராத்ரி கூறிட்ட” என்ற கந்தரலங்காரப் பாடலை எடுத்துக்காட்டி, ஈ = அருள்வாய் எனும் பொருள்பட ”வேலும் செஞ்சேவலும் செந்தமிழாற் பகர்ஆர்வம்  ஈ” என்று பாடுவார் அருணகிரி என்றார். இதன் பொருள் தெள்ளத் தெளிவாக விளங்க வேண்டி இந்த இரண்டு வரிகளை இரண்டு ராகங்களில் பாடி சிறப்பித்தார். இந்த தருணத்தில் வடமொழியையும் தமிழையும் பிரிக்க முடியாது என்பதை தேவார மூவரும் அருணகிரிநாதரும் கூறியுள்ளனர். இந்தப் பாடலில் அடுத்த இரண்டு வரிகளில், நிறைய வடமொழிச் சொற்கள் உபயோகப்படுத்தப் பட்டிருப்பதை நாம் பார்க்கலாம்.

ராக ஆலாபனைகள், ஸ்வரங்கள் இவற்றில் ஜிஎன்பி பாணி, மதுரை மணி ஐயர் பாணி என்று இனம் கண்டு கொள்ளும் நாம், சாஹித்யங்களையும் அவரவருக்கான தனித்தன்மை புலப்படும்படி வித்வான்கள் பாடியிருப்பதையும் ரசிப்பது அவசியம் என்றார். மதுரை மணிஐயர் ஒரு குறிப்பிட்ட விருத்தத்தில் ”எத்தனை விதமோ” எனும் இரண்டு பதங்களை, ‘எத்தனை” எனும் அந்த இடத்தை விட்டு விலகாமல், நகராமல், மேலே செல்லாமல், அந்த ஒரு வார்த்தையை எத்தனை விதமாக இயலுமோ அத்தனை விதமாகப் பாடி, இதை இத்தனை விதத்தில் பாடலாம் என்பதனை மெய்ப்பித்துள்ளார். எல்லா பாடலாசிரியர்களுக்குமே அவரவர்களுக்கு வாய்த்த ”அனுபவத்துளியையே வார்த்தைகளாக மலரச் செய்கிறார்கள், இந்த வார்த்தைகள் ஒன்று சேர, அது பாடலாக அமைகிறது.” 95 வயது நிரம்பிய, மேன்மை பொருந்திய தஞ்சாவூர் சங்கர ஐயருடன் ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றிப் பேசுகையில், “உனக்கு ஹரிகாம்போதியில் 50 க்ருதிகள் தெரிந்திருந்தாலும், உனக்குத் தெரிந்த ஹரிகாம்போதியே பாடும்போது மேடையில் ப்ரசன்னமாகும்” என்ற அவரது வார்த்தைகளை நினைவு படுத்தினார். இந்த ராகத்தின் அசல் ஸ்வரூபத்தைக் காட்டும் ”முருகா திருமால் மருகா” என்ற அன்னாரது பாடலைப் பாடினார். படிப்படியாக செல்லாவிட்டால் கிளாசிகல் இசையில் அழகே இல்லை என்பதை இங்கே கோடிட்டுக் காட்டினார் சந்தானகோபாலன். அதே போல பத்துவயதில் நாம் ஒரு பாடலை ரசித்ததற்கும் இப்போது ரசிப்பதற்கும் வித்தியாசத்தை நம்மாலே உணர முடியும். பாட்டுக்கென்று ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் பாட்டு உடனே உண்டாகும். ”எது வந்து நம்மை எதிர்த்த போதும் இன்னருள் புரிந்து” என்ற சங்கரய்யரின் பாடல் எப்படி அவருக்கு ஏற்பட்ட எதிர்-வாகன பயத்தால் உருவானது என்பதை நகைச்சுவையுடன் விவரித்தார் சந்தானகோபாலன். பாடலை இயற்றியவர் எதிரில் உட்கார்ந்திருப்பது போன்ற எண்ணம் எப்போதும் இருத்தல் வேண்டும் என்று பாடுபவர்களை வேண்டி கேட்டுக் கொண்டார்

மத்யமாவதி ராகத்திலுள்ள ”சரவணபவ குகனே” பாடலை எடுத்துக் கொண்டு ”நி”, எனும் ஸ்வரத்தை ஸ்வராக்ஷரப் பிரயோகமாக தனித்தும், மற்ற ஸ்வரங்களுடன் இணைத்துக் காட்டியும் அழகுறப் பாடுவது எப்படி என்பதற்கு இலக்கணமாகவும் இலட்சியமாகவும் இவர் பாடியது அனைவரின் உள்ளத்தையும் வெகுவாகக் கவர்ந்தது. இந்த ராகத்தின் சர்வமும் இந்த “நி” யில் அடங்கும் என்பதும் நமக்கு நன்கு புலனாயிற்று. அடுத்ததாக அப்பரைப் பற்றிய ஒரு சுவராசியமான விவரத்தைக் கூறினார். அவர் சமணத்தை விட்டு விலகி மறுபடியும் சைவத்தைப் பின்பற்றியதைப் பொறுக்காத மன்னன் அப்பரை “சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமசிவாயவே” என்றுதான் அப்பர் பாடினார், பாடல் அவருள் ஊறிவிட்டிருக்கிறது. அவரை அவ்வண்ணம் பாடப் பணித்திருக்கிறது.  பாடலின் முழுப் பின்னணியறிந்தால் அது அர்த்தமாவதே வேறு ஒரு தினுசாகத்தான் இருக்கும். இதைப் போலவே நிரவலுக்கான வரிகளை எப்படி தேர்ந்தெடுப்பது? பாடலைப் பாடிக் கொண்டே வரும் வேளையில் ஒரு வரியிலிருந்து உன்னையே விடுவித்துக் கொள்ள முடியாமல் இருந்தால் அதையே நிரவலுக்கான வரியாகக் கொள்ளலாம். அல்லாது இந்த வரியில் தான் நிரவல் என்பதை யாரும் அறுதியிட்டுக் கூற இயலாது. இதற்கு கோபாலகிருஷ்ண பாரதியின்  ”அம்பலம் தனில் நடமாடும் நாதனடிமலரே துணை” என்ற பாடலில், நந்தி (மத்தளம்) பிரமன் (தாளம்) நாரதர் (யாழ்) கோபாலகிருஷ்ண பாரதி (பாட்டு) ஆகிய அனைவரும் பங்கேற்கும் வரியே எப்பேற்பட்டோரையும் நிரவலுக்காக நிற்க வைக்கும் என்பது தனது அனுபவம் என்றார் சந்தானகோபாலன்.

தமிழ் ஸ்வரஜதியான “நீ அருளாயே தாயே” என்பதை பைரவியில் பாடி அதில் வரும் ”பாரிடமிகபாபகருமம்பாபரனிடமரும்தாயே” என்று முதலில் பொருள் விளங்காமல் இருந்த அரியபத வரியை பிரித்துப் பொருளுணர்த்தினார். ஸாஹித்யத்திற்காக ஒரு பாடலையும், சங்கீதத்திற்காக மற்றொன்றையும் பங்கீடு செய்து கொண்டால், ஒன்றிலிருந்து மற்றதற்குத் தாவி இன்பமுற வாய்ப்பிருக்கிறது என்று ரசிகர்களுக்கு யோசனை கொடுத்தார், சந்தானகோபாலன். இந்த ஸ்வரஜதிக்கு சாஹித்யம் அமைத்தவர் சமீபத்திய அண்ணாமலை பல்கலைக் கழகத்தைச் சார்ந்த தமிழ்ப்பண்டிதரான கே பொன்னையா பிள்ளை என்பதையும் அறிவித்தார். தன் குருநாதரான மதுரை திரு டி என் சேஷகோபாலனைப் பற்றிப் பேசிய போது, எப்படி டிஎன்எஸ் “சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச் - செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்பக்க - குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது” என்ற வரிகளை ஈடு-இணையற்ற விதத்தில் பாடுகையில், ஒவ்வொரு இடத்திலும் கண்ணன் குழலூதிய காட்சியைப் படம் பிடித்துக் காட்டியது போலிருக்கும் என்றார். குழலூதுங்கால், அவனது கண்களின் கோலமும். உதட்டின் நிலையும், புருவத்தில் தோன்றும் அயர்வும், விரல்கள் குழலின்மீது இசையைப் பரிமாறும் முயற்சியும் - இப்படியெல்லாம் கண்ணன் குழலிலிருந்து வந்த நாதத்தை ஒரு நீண்ட கார்வையாகக் கொடுப்பார் அவர். தக்க வார்த்தைக்குத் தக்க கமகத்தைக் கொடுப்பதில் வல்லவர் டிஎன்எஸ் என்று உளமார அவரைப் புகழ்ந்து, அவரைப் போல் பாடியும் காட்டினார்.

கொண்டுகூட்டிப் பாடுதல் எனும் முறை ஞானசம்பந்தர் காலத்தில் இருந்தே தமிழில் புழக்கத்தில் இருந்திருக்கிறது. இங்கே இருந்து கொண்டு கேதாரத்தைப் பாடிய அவர் அங்குள்ள ஒரு சுனையில், வண்டுபாட-மயிலாட-மான்கன்றுதுள்ள-வரிகெண்டைபாய என்பதை ஒவ்வொன்றாகச் சேர்த்துப் பாடியது அந்தக் காட்சியின் அழகை நமக்கு அள்ளித் தந்திருக்கிறது. இதைப் போலவே கடைசி திருப்பாவையான வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை எனும் பாடலில் பட்டர் பிரான் கோதை சொன்ன என்ற வரியின் பின்னே ஒவ்வொரு சொல்லாகச் சேர்த்து நல்ல கற்பனை வளத்துடன் மேற்சொன்ன கொண்டு கூட்டிப் பாடுதலுக்கான இன்னுமொரு உதாரணமாக அளித்தார், சந்தானகோபாலன்.

உருக்கத்தை வெளிப்படுத்துவது எப்படி? குரல் கம்மிப்(choke) போவது போல ஆகவேண்டுமோ? பதிலை ரசிகர்களிடமே விட்டுவிட்டார் சந்தானகோபாலன். புழு எனும் வார்த்தை வந்தால் அது துடிப்பதை குரலின் தன்மை வெளிக்கொணர வேண்டும். இதைப்  பெரும்பாலும் விருத்தம் பாடும் இடங்களில் நயத்துடன் காட்டலாம். அடுத்து நிந்தாஸ்துதி. இதற்கு இவர் தேர்ந்தெடுத்தது ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் சிவனைப் பற்றிய பாடல். யார் இந்த சிவன்? முருகனுக்கு ஒரு சீடன், முக்கண்ணன், (திரு)வெண்காடன், விருத்தன், வெண்ணீரணிவான் (வெண்ணீரை மேனி முழுதும் பூசியிருப்பான்), கருத்தோல் கலையா பித்தன், உதைகாலி – இப்படியெல்லாம் வர்ணித்திருப்பதை இவர் சிறந்த அர்த்தபாவத்துடன் பாடினார். த்யாகராஜ கீர்த்தனைகளைக் கூட அர்த்தம் புரிந்து ரசிப்பது அவசியம், குறைந்தது பல்லவியை மட்டுமாவது அர்த்தமாக்கிக் கொள்ளணும் என்றார்.

எப்பொழுது ஒரு ராகமாலிகை வெற்றி பெரும்? அந்தந்த ராகங்கள் பாடலில் உருவெடுத்தவுடன் அந்த ராகத்திலுள்ள முக்கியமான பாடல் ரசிகர்கள் கவனத்திற்கு வரவேண்டும். உதாரணத்திற்கு கமலாமனோஹரி ராகம் உதித்தால் உடனே கஞ்சதளாயதாக்ஷி நினைவில் அவதரிக்க வேண்டும். (எடுத்துக்காட்டக இவரளித்த ராகமாலிகைப் பாடல் ”ஆரபிமானம் வைத்தார்” பல ராகங்களைக் கொண்டிருந்தது) மற்றபடி வில்லுப்பாட்டு, கண்ணி, காவடிச் சிந்து, தில்லானா, மற்றும் ஜாவளி போன்ற வகைவகையான உருப்படிகள் தமிழில் உள்ளன என்று கூறி மதிப்பிற்குரிய திரு சங்கரசிவ பாகவதர் அமைத்த ஜாவளி ஒன்றைப் பாடினார். ”சுந்தரி என் சொப்பனத்தில் வந்ததார் சொல்வாய்” எனும் ஜாவளியில், செந்தூர் கந்தன்தானோ என்று கேட்கிறாள் நாயகி. நாயகனாகிய வேலன் பரிசு தாரேன், அவை என்னவென்றால், ஆறுபடை வீடும் வேலும், ஏறும் மயிலும் என்கிறான், கூடுவாயோ என்று அன்புமேலிடக் கேட்கிறான். மேலும் அந்த சங்கரன் உன் மாமனாகுமே என்கிறான்.. இந்தப் பாடலை ரசிகர்களுக்கு வழங்கும்போது, பாடல் பாடப்பட்ட சூழ்நிலை, நாயக-நாயகி பாவம், ராகம் (கமாஸ்) எல்லாவற்றையும் தன்மனதில் ஏற்றிய பின்னரே பாடகர் ரசிகர்களுக்கு வழங்க வேண்டும். முதல் வார்த்தையான “சுந்தரி” என்பதையே நிதானித்து அந்த மூடிற்கு (mood) ஏற்பதான் வழங்க வேண்டும். அப்பொழுதுதான் அது சோபிக்கும்.

பிள்ளையாருக்கு படைத்தல் என்ன வகை என்றதும், 21 பொருட்களைப் பட்டியலிடும் ”பக்கரை விசித்ரமணி” என்ற பாடலில் கரும்பு, சர்க்கரை பருப்புடன், நெய் முதலியனவற்றை, கண்ட நடையில், அருணகிரி “சமைத்த” பாடலை வியந்தோதிப் பாடி, அதையடுத்து, ”உருவாய் அருவாய் உளதாய் இலதாய்” என்பதை வழங்கி, ”இசையையும் அதனுடன் பின்னிப் பிணைந்து வரும் தமிழையும் சிவ-சக்தி தத்துவம் போல, இரண்டு கண்களாகப் பொருள் கொண்டு, இரண்டையுமே கவனத்தில் கொண்டு ரசிக்க வேண்டும்” என்று வந்திருந்த இசையார்வலர்களைக் கேட்டுக் கொண்டு நிகழ்ச்சியை நிறைவு செய்தார் சந்தானகோபாலன்.

வயலினில் விஜய் கணேஷ், மிருதங்கத்தில் அவரது அரும்புதல்வரான ஷங்கர் பிரசாத். பக்கபலமாக இருந்தனர். விஜய் உற்று கவனித்துத் திறம்பட வாசித்து, வாத்திய வாசிப்பில் மட்டுமேயன்றி பேசிய மொழிப் பரிமாற்றங்களிலும் பங்கேற்று சிறப்பளித்தார். ஷங்கர் எந்த அளவிற்கு மிருதங்கம் இது போன்ற நிகழ்ச்சிகளுக்குத் தேவையோ அதையறிந்து வாசித்து அவரது ஆற்றலை வெளிப்படுத்தினார்.

எஸ் சிவகுமார்

About Sabhash - Everything about classical music, dance, drama and a platform for inclusive entertainment

Sabhash.com is the one-stop destination for the latest news and information on the performing arts of India - classical music and dance, theatre, bhajans, discourses, folk performances, and other lesser known art forms. Institutions that revolve around the performing arts have exploded in numbers, and thanks to the Internet which has made information easily accessible, the number of rasikas has grown too. Corporate patronage has played a big part in increasing the world-wide reach of the Indian arts. Sabhash wishes to be a platform for inclusive growth giving an equal opportunity and recognition to not only the main performer but also the artistes who accompany them on stage, and the people who work backstage and play the role of unsung heroes.