Sign-up for Newsletter

Theatre > Review
கிரா-குழம்பு - கி ராஜநாராயண்
08 January, 2020

கி. ரா என்கிற கி ராஜநாராயண் ஒரு தலைசிறந்த எழுத்தாளர். கரிசல் மண்ணின் பெருமை பாடியவர். 1958ல் சரஸ்வதி இதழ் தொடங்கி பல காலம் எழுத்தை ஒரு தவமாகக் கொண்டு செயல்பட்டவர். இத்தனைக்கும் தான் பள்ளிப் பக்கம் மழைக்காக ஒதுங்கியவனே என்று அவரே குறிப்பிட்டுள்ளார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றியவர். நல்ல இசை ஞானமும் கொண்டவர். இவரது சில நாட்டுப்புறப் படைப்புகளிலிருந்து பெற்ற கதைகளையும் கதைக் கருக்களையும் கருத்துகளையும் ஆதாரமாகக் கொண்டு சென்னை அண்ணாநகரில் ஆண்டி-ஸ்பாட் (anti-spot) எனுமிடத்தில் கிரா-குழம்பு என்ற ஒரு நாடக-நிகழ்வு நடந்தேறியது.

நவீன நாடக பாணியில் நடத்தப்பட்ட இந்த நாடகத்தில் கூத்தின் முறையில் கதை சொல்லலும், நடித்துக் காட்டுதலும், பாட்டிசைத்தலும், ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்த்தப்பட்டதால் பார்ப்பவர்களின் சுவாரசியம் குன்றாமல் இருக்கச் செய்தது.

மிஸ்டர் வானமும் மிஸ் பூமியும் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டனர் என்று தொடங்கி, அவர்களின் காதலை எந்தவித விரசமும் இல்லாமல் விவரித்து, எவ்வாறு ஒருவரை ஒருவர் நெருங்கி வந்திருப்பதால், உயரமானவர்கள் குனிந்தே நடக்க வேண்டி இருக்கிறது, ஒட்டகச்சிவிங்கியின் பாடு ஒரே திண்டாட்டம், இருக்கும் இடமே சுருங்கி விட்டது, சந்திரனும் சூரியனும் பட்ட அவஸ்தை - இவற்றையெல்லாம் பேச்சு வழி மட்டுமின்றி அங்க அசைவுகளாலும் செய்கைகளினாலும், நாடகத்தின் நடிகர்களான ஆனந்த் சாமியும், ரவீந்திராவும் மாயாவும் நடத்திக் காட்டினர். இதில் குறிப்பாக மாயா தனது உடம்பைக் குறுக்கியும், நீட்டியும் வளைத்தும் நடி(ட)த்திக்காட்டிய கழைக்கூத்தாடி (acrobatics) வித்தைகள் வந்திருந்த சிறுவர்களைக் குதூகலமடையச் செய்தது, மற்றவர்கள் பிரமித்துப் போனார்கள்.

இவ்வாறு வானம் அதனது இடத்தில் இல்லாததனால் பருவ மாற்றங்களும் நிலைகுலைந்து போயின இவற்றையெல்லாம் விவரித்தபடியே ஒரு பாட்டியிடம் நம்மை இட்டுச் சென்றார்கள். ”ஒற்றைப் பனைமரத்தை தடியா ஒடைச்சி இரட்டத்தலைப் பாம்பு சுருட்டிக் கொண்டையாக போட்டுக் கொண்ட பாட்டியாகும்” – இது இட்லிக் கடை பாட்டியைப் பற்றிய விவரணை. (இது போன்ற, சிறந்த, பேச்சு வழக்கத்தில் இருந்து மாறுபட்ட வசனங்களை அங்கங்கே உதிர்த்துச் சென்றனர், இந்த நடிகர்கள்) பாட்டியின் இட்லிக்கு தொட்டுக் கொள்ள மொச்சைக் கொட்டைக் குழம்புதான் என்று கூறியதோடு நில்லாமல் அவரவர்களுக்கு கொஞ்சம் மொச்சைக் கொட்டைகளையும் கொடுத்தனர். அதேபோல மாயா பாட்டி போல் பேசியது (மாயாவிற்கு) பெரிய விஷயம் இல்லையென்றாலும் இடத்திற்குத் தக்கபடி அமைந்து போயிற்று. கொடுத்த மொச்சையை சிலர் மென்று பார்த்தனர், சிலர் தங்கள் சட்டைப் பாக்கெட்டிற்குள் ஞாபகச் சின்னமாக பாவித்து எடுத்துச் சென்றனர்.

அடுத்து மாயா கருடனாகக் காட்சியளித்தார். ஸ்வர்கத்துக்குப் பயணிக்கிறார். தேவர்கள் மத்தியில் ஆஜராகிறார். ஆனால் அங்கு கருடன் ஆசையாகச் சாப்பிட, அது ஏற்கெனவே சாப்பிட்டி ருசி கண்ட, நாவல் பழம் இல்லை. (இப்பொழுது வானம் பழைய நிலைக்கு மாறி மேலேயே இருக்கிறது ஆனால் பூமி மீது அதன் காதல் மாறாமல் இருக்கிறது) என்ன செய்வது. மேலே இதற்கெல்லாம் வழியில்லை, என்ன சொர்க்கம் என்று அங்கலாய்க்கிறது கருடன்.

மேலுலகம் என்றால் பரந்தாமன் இருப்பான், இல்லாமலா? ஆனால் அவனை சித்தரித்த விதம் தான் வித்தியாசமாக இருந்தது. கட்டை விரலைக் கிரிக்கெட்டில் “அவுட்” என்பது போல அமைத்துக் கொண்டு அதில் சக்கரம் சுழல்வது போல பாவனை. சக்கரம் சரியாகச் சுழலவில்லை. கொஞ்சம் எண்ணெய் தேவைப்படுகிறது. தன் கூந்தலிலிருக்கும் எண்ணெயைத் தந்தருளுகிறாள் தேவி லட்சுமி. ஹாஸ்யத்திற்கு ஹாஸ்யம், எங்கு சென்றாலும், மேலுலகமானாலும் பிரச்சினைகளும் தீர்வுகளும் இருந்து கொண்டேயிருக்கும் எனும் கருத்தின் வெளிப்பாடு! பாராட்டு கி.ராவிற்கா தத்ரூபமாக செய்து காட்டிய நடிகர்களுக்கா என்ற ஒரு வியப்பான நிலையில் ரசிகர்கள். இது போலவே ரசிக்கத்தக்க இடங்கள் பலவுண்டு. இங்கே சிலவற்றைக் குறிப்பிடுகிறோம். சபாபதி என்பவரை அறிமுகப்படுத்தும் விதம், “பழம் நீயப்பா” பாடலை சமயோசிதமான விதத்தில் கதைப் பொருளுக்கேற்ப உபயோகித்தல், அரியமூல மந்திரத்தை, அரிய முறையில்  பெறுதல், அதுவும் ஒருவரின் காதில் மட்டுமே உரைத்து அதனை ஒரு ரகசியமான ஒன்றாக இருக்கச் செய்திடும் பழக்கம், இடையில் ஊசியின் சரித்திரமும் அதை உபயோகிக்கும் தையல்காரரின் பங்கு, இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் – எண்ணற்றவை, எண்ணற்றவை. ஒரு ஒன்றரை மணி நேர அவகாசத்தில் இது போன்ற பல விஷயங்களைப் பகிர்ந்து, நமது சிந்தனைத் தீயை மூட்டிச் சென்றது இந்த நாடக-நிகழ்வு. நாடகம் நடத்தப்படும் நேரத்தில் ரசிகர்களின் முகங்களை கவனித்தோம். வயது வரம்பின்றி எல்லார் முகத்திலும் அடுத்து என்ன வரும் என்ற ஆவல். ஏதோ சஸ்பென்ஸை எதிர்பார்த்து அல்ல, ஒரு ஆர்வத்துடன் தான்.

இந்த நாடக-நிகழ்வில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் மற்றொன்று. நடத்திக் காட்டியவையெல்லாம் குட்டிக் கதைகள் போலவும் கற்பனையின் தாண்டவத்தில் உதித்த சிறிய நிகழ்வுகள் போலத் தோன்றினாலும், இவை எல்லாவற்றையும் தொடுத்துத் தொகுத்து  ஒன்றுலிருந்து ஒன்றிற்கு இடைவெளி தோன்றாமல் பயணித்து, வந்திருக்கும் ஆர்வலர்களை மனதில் கொண்டு, அவர்களிடம் கேள்விகள் கேட்டு, முழுமையாக அவர்ளையும் ஈடுபடுத்தி, அவர்களது மனதைப் புரிந்து அதைப் போலவே நிகழ்ச்சியை நடத்தி,  -  இவையெல்லாவற்றையும் ஒரு சகஜபாவத்துடன் செய்து காட்டும்படி வடிவமைத்திருந்த இயக்குநர் ராஜீவ் க்ருஷ்ணனுக்கும் அங்ஙனமே இவற்றைப் புரிந்துணர்ந்து, பங்கேற்று தங்களது ஆற்றலை வெளிப்படுத்திய நடிகர்கள் ஆனந்த்சாமி, மாயா மற்றும் ரவீந்த்ரா ஆகியோரை எத்தனை பாராட்டினாலும் அது மிகையாக அமையாது.

இதை மீறி விமர்சனம் செய்தால் சென்று பார்க்கும் ஆர்வம் குன்றிவிடலாம் என்பதால் இத்தோடு நிறுத்தவும் என்கிறது எனது மனசாட்சி. அங்ஙனமே!

(இவர்களுக்கு வண்ண ஆடைகளைக் கொடுத்தது காவேரி லால்சந்த் என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். எளிமையான ஆடைகளே, இவர்கள் ஏற்றுள்ள வேடத்திற்கு ஏற்றபடி.)

எஸ் சிவகுமார்

About Sabhash - Everything about classical music, dance, drama and a platform for inclusive entertainment

Sabhash.com is the one-stop destination for the latest news and information on the performing arts of India - classical music and dance, theatre, bhajans, discourses, folk performances, and other lesser known art forms. Institutions that revolve around the performing arts have exploded in numbers, and thanks to the Internet which has made information easily accessible, the number of rasikas has grown too. Corporate patronage has played a big part in increasing the world-wide reach of the Indian arts. Sabhash wishes to be a platform for inclusive growth giving an equal opportunity and recognition to not only the main performer but also the artistes who accompany them on stage, and the people who work backstage and play the role of unsung heroes.