Sign-up for Newsletter

Theatre > Review
Sathiya Vaakku at the Drama Festival - 113th year celebration - Sri Parthasarathy Swami Sabha
24 June, 2013

சத்தியத்திற்குப் பல முனைகளிலிருந்தும் சோதனை ; சத்தியம் வென்று தீருமா எனும் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அமைந்திருந்த்து “சத்திய வாக்கு” நாடகம்.

எளிமையான நிலையிலிருந்து கலெக்டர் பதவிக்கு உயர்ந்த மருமகள். ஆனால் மகனோ தீக்‌ஷிதர் தொழிலை மேற்கொண்டுள்ளவர். இதனால் தாழ்ந்த மனப்பான்மை ஒரு பிரச்சினையாக இவர்கள் மத்தியில் நாளடைவில் உருவெடுத்து விடுகிறது ; “விஸ்வரூபமும்” எடுத்து விட்டது. இது நிற்க, கோவிலில் இருந்து அபூர்வ சிலை ஒன்றை திருடித் தரச் சொல்லி உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் இதே தீக்‌ஷிதரை வற்புறுத்துகிறார். தீக்‌ஷிதர் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்.  (இவை எல்லாம் நடப்பதோ சிதம்பரத்தில். அமைதியான சங்கீதப் பின்னணியில் நாடகத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள்.) சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் தீக்‌ஷிதரது நடத்தை இருப்பதாகப் படுகிறது. இதற்கிடையில் பெரிய தீக்‌ஷிதர், மெத்தப் படித்தவர். அவரை மனதார நேசிக்கும் அவரது தங்கை. கணவனை இழக்காமலும், இழந்து நிற்பதுதான் இந்த தங்கையின் நிலைப்பாடு. இங்கே இந்த தங்கையைப் பற்றி.....இவரை அத்தை என்றே அழைப்போம்.....இவரது நடிப்பைப் பற்றி உடனுக்குடன் இரண்டு வார்த்தைகள் சொல்ல வேண்டும்.....என்னைப் பொறுத்த வரையில், ஏற்ற பாத்திரத்தை உணர்ந்து நடிப்பதில் நடிகையர் திலகம் திருமதி சாவித்திரிக்கு இணையாகச் செய்து காட்டியிருப்பதாகவே தோன்றிற்று. என்ன உருக்கம்! என்ன நெகிழ்வு! தனது சொந்த வாழ்க்கையில் இந்த நிலை ஏற்பட்டு, கால் ஊன்றி, சற்றே தாங்கலாக நடந்து, குரல் ஏற்றத் தாழ்வுகளை தக்கபடி அளித்து... வசனங்களைத் தெளிவுடன் பேசி....இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம்.....ஆம் உண்மையில் சொக்கிப் போனேன்.....

கதையைத் தொடருவோம்.....

சின்ன தீக்‌ஷிதருக்கு தன் பெண்டாட்டி ராஜினாமா செய்துவிட்டு வீட்டோடு இருந்து விட வேண்டுமென்ற ஆசை. பெரிய தீக்‌ஷிதருக்கு இதில் ஒப்புதல் இல்லை. அத்தைக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஒரு சந்திப்பின் போது அரசியல்வாதி (தங்கபாண்டி) நடக்கவிருக்கும் விழாவில் தீவிரவாதிகள் அழிக்கும் நோக்கத்துடன் வருவார்கள் என்று எதிர்பார்ப்பதாகச் சொல்லி, கலெக்டருக்கு ஆபத்து என்றும், விடுப்பு எடுத்துச் செல்லும்படியும் ஆலோசனை அளிக்கிறான். கதை நன்றாய் முற்றி விட்டது என்று நினைக்கிறேன்.........இதன் பிறகு என்ன நடக்கிறது.......என்ன நடக்கக் கூடும்.......என்பதை அறிய நேரில் அடுத்த முறை வந்து கண்டு தெரிந்து கொள்ளுங்கள்....முடிவில் சுபம் உண்டாகும் என்பதை மட்டும் நான் அறிவிக்கிறேன்..

நாடக இயக்கம் : மதுரை ராஜாமணி, மிகைப் படுத்தாத காட்சிகள். காட்சிகளில் சோடையில்லை, தொய்வில்லை. ஆனால் கோவில் பிரகாரத்தில் புலியின் பொம்மையைக் கொண்டு வந்தது அவ்வளவு சரியாகப் படவில்லை. அதை நகர்த்திய விதமும் சோபிக்கவே இல்லை. ஒரு மோசமான நிலையை ஒருவர் கனவில் எதிர்கொள்கிறார் என்பதைக் காட்ட வேறு வழிகளா இல்லை?

வசனகர்த்தாவுக்கு வணக்கங்கள் பல. தமிழைக் குழைத்துக் கொடுத்துள்ளார். அவ்வளவாகப் பஞ்ச் டயலாக் இல்லை, ஆனால் அர்த்தமுள்ள பேச்சு இருந்தது.

பின்னணி இசை நாம் சிதம்பரத்தில் வாசம் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்திக் கொண்டே இருந்தது.

ஒரே பாத்திரத்தை மட்டும் சிலாகித்து எழுதியதாகக் கொள்ள வேண்டாம். யாவருமே “பாத்திரமறிந்து”  தமது திறனை, மற்றவர்களுக்கு இடமளிக்கும் வகையில் செய்துள்ளனர்.

அன்றொரு நாள் “சத்தியமேவ ஜெயதே” ஆனால் இன்று சத்தியத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் முயற்சி. “சத்திய வாக்கு” சத்தியத்தை நிலை நாட்டுமா? உயிர் பெறச் செய்யுமா? இது மதுரை ராஜாமணி நடத்திக் காட்டிய “சத்திய சோதனையோ”?

(Sri Rajamathangi Creations Sathiya Vaaku by Madurai Rajamani at Narada Gana Sabha, organized by Sri Parthasarathi Swami Sabha as part of its 113th year celebration and as part of the Drama Festival on 20th June, 2013 at 7.00 p.m.)

 

ஆர்வலன் (aarvalan56@gmail.com)

For more pics :

http://www.sabhash.com/theatre/events/4603/sri-parthasarathy-swami-sabha-13th-year-drama-fest.html

About Sabhash - Everything about classical music, dance, drama and a platform for inclusive entertainment

Sabhash.com is the one-stop destination for the latest news and information on the performing arts of India - classical music and dance, theatre, bhajans, discourses, folk performances, and other lesser known art forms. Institutions that revolve around the performing arts have exploded in numbers, and thanks to the Internet which has made information easily accessible, the number of rasikas has grown too. Corporate patronage has played a big part in increasing the world-wide reach of the Indian arts. Sabhash wishes to be a platform for inclusive growth giving an equal opportunity and recognition to not only the main performer but also the artistes who accompany them on stage, and the people who work backstage and play the role of unsung heroes.